வக்கீல் கொலை குற்றவாளிகளை போலீஸ் காவலில் 3 நாள் விசாரிக்கலாம்: ஆலந்தூர் கோர்ட் உத்தரவு

ஆலந்தூர்: பெருங்குடி ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர். இவர், கடந்த 25ம்தேதி அன்று இரவு, வீட்டின் முன் மர்ம ஆசாமிகளால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கடந்த 27ம்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில், சென்னை வள்ளுவர் கோட்டத்தை சேர்ந்த முருகன் (28), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் (28), மண்ணூர்பேட்டை தர் (27) ஆகிய 3 பேர் சரணடைந்தனர். இதனால் நீதிபதி, 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், கொலையாளி 3 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, துரைப்பாக்கம், ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி புவனேஷ்வரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பலத்த பாதுகாப்புடன், முகமூடி அணிந்திருந்த 3 குற்றவாளிகளையும் அழைத்து சென்றனர். அப்போது அங்கு குவிந்த சில வழக்கறிஞர்கள், குற்றவாளிகளை தாக்க முயன்றனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், வருகிற 1ம்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Related Stories: