துபாயிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தல் கொள்ளை நாடகமாடிய ‘குருவி’யை லாட்ஜில் அடைத்து சித்ரவதை: நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ரசூல்கனி (56), வெளிநாட்டுக்குச் சென்று பொருட்களை கொண்டுவரும் குருவியாக மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த மாதம் 19ம் தேதி துபாய்க்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு கடந்த மாதம் 26ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து காரில் 2 கிலோ தங்கம், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மதுராந்தகம் வந்தபோது, மற்றொரு காரில் வந்த ஒரு மர்ம கும்பல் ரசூல்கனியின் காரில் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, அவர் வைத்திருந்த தங்கம், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாக வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு ரசூல்கனி தகவல் கொடுத்தார்.  அதன்பேரில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான கொடுங்கையூரைச் சேர்ந்த அப்துல் சலாம் (40), மண்ணடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (36), அப்துல்வதுர் (40), அப்துல் குத்தூஸ் (40) ஆகிய 4 பேரும் மதுராந்தகம் சென்று பார்த்தபோது, ரசூல்கனி கொள்ளைபோனதாக நாடகம் ஆடியது அவர்களுக்கு தெரியவந்தது.

இதைதொடர்ந்து, அவரிடம் பொருட்கள் குறித்து கேட்டபோது, உண்மையாகவே விபத்தை ஏற்படுத்திவிட்டு கொள்ளையர்கள் பறித்துச்சென்றதாக அவர் கூறினார். எனவே, அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோதும், தனக்கு எதுவும் தெரியாது என்றே திரும்ப திரும்ப தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகம் அடைந்த உரிமையாளர்கள், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்று தங்க வைத்து ரசூல்கனியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரசூல்கனி, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக நாடகம் ஆடியதை ஒப்புக் கொண்டார். பின்னர், படுகாயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், மதுராந்தகம் காவல்நிலையம் சென்று அப்துல்சலாம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இன்னும் தங்கம், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே, ரசூல்கனியின் மனைவி ஜகுபர் நிஷா, துபாய்க்குச் சென்று வந்த தனது கணவர் வீட்டுக்கு வராததால் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் கணவரை மீட்டுத்தர கோரி புகார் அளித்தார்.இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படி ஆய்வாளர் ராஜாசிங் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரசூல்கனி வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அப்துல் சலாம், அப்துல் ரகுமான், அப்துல் குத்தூஸ், அப்துல்வதுர் ஆகிய 4 பேரை பிடித்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் ரசூல்கனியிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்காக அவரை அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் இவர்கள் 4 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: