கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கொடூரம்: தற்கொலை நாடகமாடிய கணவன், மாமியார் கைது

* குன்றத்தூர் அருகே பயங்கரம்

சென்னை: குன்றத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு தர மறுத்ததால், புதுப்பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு  தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவன், உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் அருகே அமரம்பேடு கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவரது, மனைவி லோகப்பிரியா (26). இருவருக்கும், கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியதால், லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் நகை மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணத்துக்கு பிறகு, கோகுலகண்ணன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கு, கோகுலகண்ணனின் தாய் ராஜேஸ்வரி (61) உடந்தையாக இருந்து வந்திருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணையாக 10 சவரன் நகை வாங்கி வரும்படி கோகுலகண்ணனும், அவரது தாய் ராஜேஸ்வரியும் லோகப்ரியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதையறிந்த, ேலாகப்ரியாவின் பெற்றோர், அவர்களை அனுசரித்து செல்லும்படி கூறி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி லோகப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவனும், மாமியாரும் சேர்ந்து மகளை கொலை செய்திருக்கலாம் எனவும் சோமங்கலம் போலீசில் லோகப்ரியாவின் தந்தை வஜ்ரவேலு புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியதால், லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் நகை மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம் வழங்கியது தெரியவந்தது.

திருமணமான சில மாதங்களிலேயே லோகப்ரியாவிடம் கூடுதலாக 10 சவரன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வரும்படி கோகுலகண்ணனும், அவரது மாமியார் ராஜேஸ்வரியும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அதற்கு லோகப்பிரியா மறுக்கவே, அவரை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். கொலையை மறைக்க அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கோகுலகண்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், இருவரும் கூடுதல் வரதட்சணை கேட்டு லோகப்பிரியாவை கொலை செய்து தற்கொலை நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். பிறகு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* தலைக்கு விக் வைத்து ஏமாற்றி திருமணம்

திருமணத்திற்காக கோகுலகண்ணன் பெண் பார்க்க தொடங்கியதும் தனது சொட்டை தலைக்கு அழகான பெண் கிடைக்காது என எண்ணினார். எனவே, ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்வதாக காட்டிக்கொண்டு வரதட்சணையாக நகை, ரொக்கப்பணம் அதிகம் வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதலில் தனது தலைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விக் வாங்கியுள்ளார். அதன்பிறகே பெண் பார்த்து லோகப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யாமல் ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், தனது தாயாருடன் சேர்ந்து 10 சவரன் நகை வாங்கி வரும்படி லோகப்பிரியாவை தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

* லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம், வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

Related Stories: