சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பணத்தில் பெங்களூருவில் ரூ.90 லட்சத்தில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி

கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பணத்தில் பெங்களூருவில் ரூ.90 லட்சத்தில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). பிஇ படித்த இவர் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். சிங்கப்பூரில் பொறியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருப்பதாக பெங்களூர் ஹோசப்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் ஆன்லைனில் அறிவிப்பு வெளியிட்டதை பார்த்து, செல்போனில் தொடர்பு கொண்டார் ரஞ்சித்குமார். பாலமுருகன் வேலைக்கான ஆர்டர், பிராசசிங் என்ற பெயரில் பல்வேறு கால கட்டத்தில் ரூ.6.50 லட்சம் பெற்றார். பணம் வாங்கி 2 ஆண்டாகியும் இவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது தொடர்பாக ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனர். விசாரணையில் இவர் போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து 21 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை வைத்து பார்த்தபோது இவர் மேலும் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சிங்கப்பூரில் வேலைக்காக 4 லட்ச ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.

விருதுநகர், திருச்சி, தென்காசி என பல்வேறு பகுதியை சேர்ந்த 5 பேரிடம் மேலும் 11.50 லட்ச ரூபாய் இவர் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பாலமுருகன் தொடர்பாக புகார்கள் குவிந்து வருகின்றன. 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவர் அதிகளவு பணத்தை மோசடி அதில் பெங்களூரில் ரூ.90 லட்சத்தில் ஓட்டல் வாங்கி நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், ரூ.2 கோடி மோசடி செய்து மேலும் 2 ஓட்டல் துவங்க இவர் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கோவை சிறையில் அடைக்கப்பட்ட இவரை காவலில் எடுத்து விசாரிக்க பல்வேறு மாவட்ட போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: