சென்னை புறநகர் பகுதிகளில், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு 30.31 கி.மீ நீளத்திற்கு ரூ.82 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள அனுமதி: அமைச்சர் கே,என்,நேரு

கடந்த ஆட்சி காலத்தில் பொதுமக்கள் - தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வராமலே இருந்த நாமக்கல், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், மயிலாடுதுறை, மன்னார்குடி, ராணிப்பேட்டை, சங்கரன்கோவில், திருமங்கலம் ஆகிய நகராட்சிகளில் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள்  ரூ.267  கோடி மதிப்பீட்டில்  நடைபெற்று வருகின்றன. கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதலமைச்சரரால் கருணை உள்ளத்துடன் வழங்கப்பட்ட, வணிக மையத்துடன் கூடிய திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கும் பணி ரூ.350 கோடி மதிப்பீட்டில் துரிதமாக நடைப்பெற்று வருகிறது.  

2022-23 ஆம் ஆண்டில் திருப்பூர், திருவள்ளூர், பொள்ளாச்சி,  இராமநாதபுரம், ஓசூர், கூடலூர்(தேனி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், சிதம்பரம், ஆற்காடு, உசிலம்பட்டி, மேட்டூர், எடப்பாடி ஆகிய 17  புதிய பேருந்து நிலையங்களும் முசிறி, ஜெயங்கொண்டம், கோபிசெட்டிபாளையம், மானாமதுரை, பழனி, கொடைக்கானல், அருப்புக்கோட்டை, பள்ளப்பட்டி, வாலாஜாபேட்டை, ஆத்தூர், குளித்தலை, இராமேஸ்வரம், சிவகங்கை, கூத்தாநல்லூர், சாத்தூர், களக்காடு, இராஜபாளையம், தருமபுரி, துறையூர், பெரியகுளம், சிதம்பரம், மதுரை மாநகராட்சியில் ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய 23 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் கடந்த இரண்டாண்டுகளில் பேரூராட்சிகளில் 25 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் ரூ.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 161 தகனமேடைகள் உள்ளன. தற்போதுள்ள தகனமேடைகளை படிப்படியாக நவீன எரிவாயு (LPG) தகனமேடைகளாக மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை  38 பணிகள் முடிவுற்றள்ளன.  

மேலும் இதர மாநராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.111 கோடி மதிப்பீட்டில், 86 நவீன எரிவாயு மயானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  25 நகராட்சிகளில் புதிய எரிவாயு தகன மேடைகளும் 17 நகராட்சிகளில்  ஏற்கனவே உள்ள சாதாரண தகன மேடைகளை நவீன எரிவாயு தகன மேடைகளாகவும் இந்த ஆண்டே மாற்றியமைக்கப்படும்.

பேரூராட்சிகளில் 70 நவீன எரிவாயு தகன மேடைகள் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.                      இந்த ஆண்டில், மேலும்  25  நவீன தகன மேடைகள் அமைக்கப்படவுள்ளன. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், ரூ.309 கோடி மதிப்பீட்டில், 73 புதிய சந்தைகளும் ரூ.106 கோடி மதிப்பீட்டில் 33 சந்தைகள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல் பேரூராட்சிகளில் 30 சந்தைகள்,                                    ரூ.83 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 10 சந்தைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.176 கோடி மதிப்பீட்டில்,  89 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் நூலகங்கள், வெறும் நூலகங்களாக மட்டும் செயல்படாமல், வேலை நாடுவோர், திறன்மிக்க மாணாக்கர்கள் நன்கு பயிலுகின்ற பயிற்சி அரங்கங்களாகவும் செயல்படும்.  இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் நகர்ப்புர மாணாக்கர்கள், வேலை நாடுவோர் மட்டுமின்றி கிராமப்புற இளைஞர்களும் இவற்றை பயன்படுத்தி பயன்பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, 19 மாநகராட்சிகள் மற்றும் 129 நகராட்சிகளில், ரூ.395 கோடி மதிப்பீட்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கையிலான தெரு விளக்குகளை LED தெருவிளக்குகளாக மாற்றுதல் மற்றும் ரூ.183 கோடி மதிப்பீட்டில்1 இலட்சத்து 11 ஆயிரம் எண்ணிக்கையிலான புதிய தெரு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றது. அதேபோல், 439  பேரூராட்சிகளில் ரூ.156 கோடி மதிப்பீட்டில் 2 இலட்சத்து  67 ஆயிரம்  எண்ணிக்கையிலான தெரு விளக்குகளை LED தெருவிளக்குகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பயோமைனிங் மூலம் தேக்கத் திடக்கழிவுகளை கையாண்டு நிலத்தினை மீட்டெடுக்கும் பணி பல்வேறு உள்ளாட்சிகளில் நடைபெற்று வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 225 ஏக்கர் பரப்பளவில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தேங்கியுள்ள பழைய குப்பை கழிவுகளின் அளவு சுமார்                        34 லட்சம் கன மீட்டர் ஆகும். இந்நிலத்தை பயோமைனிங் முறையில் மீட்டெடுக்க ரூ.351 கோடி மதிப்பீட்டில் இதுவரை 20.54 இலட்சம் கன மீட்டர் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இத்திட்டம் ஜுன் 2024ல் முடிவுறும்போது 200 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்படும்.

சென்னை மாநகரத்தின் வடக்கு பகுதியில் 343 ஏக்கர் பரப்பளவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் தேங்கியுள்ள 66.52 லட்சம் மெட்ரிக்டன் பழைய குப்பை கழிவுகள் உள்ளது. இந்நிலத்தை பயோமைனிங் முறையில் மீட்டெடுக்க ரூ.648 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டம் முடிவுறும்போது 252 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்படும். 122 உள்ளாட்சிகளில் குவிந்துள்ள தேக்க திடக் கழிவுகளின் மொத்த அளவு 106 லட்சம் கன மீட்டர் ஆகும். ரூ.600 கோடி மதிப்பீட்டில் 93 லட்சம் கன மீட்டர் தேக்க திடக் கழிவுகளை அகற்றுவதற்காக 18 மாநகராட்சிகள் மற்றும் 104 நகராட்சிகளில் பயோமைனிங் முறை மேற்கொள்ளப்பட்டு, 64 இடங்களில் பணி முடிக்கப்பட்டு மீதமுள்ள  58 இடங்களில் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவுறும் போது சுமார் 950 ஏக்கர் நிலங்கள் மீட்கப்படும்.

131 பேரூராட்சிகளில்  குவிந்துள்ள தேக்க திடக் கழிவுகளின் மொத்த அளவு 11.6 லட்சம் கன மீட்டர் ஆகும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் தேக்க திடக்கழிவுகளை அகற்றுவதற்காக, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இவற்றில் 28 பேரூராட்சிகளில் பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 103 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.  பயோமைனிங் முறையில் பணிகள் முடிவுறும் போது  257 ஏக்கர் நிலங்கள்  மீட்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம்                               9,972 பூங்காக்களும் 1,034 திறந்த வெளி இடங்களும் உள்ளன.

இவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 435 பூங்காக்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. 441 பூங்காக்கள்  மேம்படுத்தப்பட்டுள்ளன.    2023-2024 ஆம் ஆண்டில் மேலும், 339 பூங்காக்கள் மேம்படுத்தப்படவுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 210 நீர் நிலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 61 நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதர மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 2,477 நீர் நிலைகளில் 269 நீர் நிலைகள் ரூ.233 கோடி மதிப்பீட்டில்  கடந்த 2 ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 2,212 குளங்களில் ரூ. 171 கோடி மதிப்பீட்டில் 565 குளங்கள் கடந்த 2 ஆண்டுகளில்  மேம்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் மொத்தம் 8,744 சமுதாயக் கழிப்பறைகளும், 3,205 பொதுக் கழிப்பறைகளும் செயல்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் 2.0ன் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகர சுகாதார செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, 360 சமூக கழிப்பறைகள், 417 பொது கழிப்பறைகள் மற்றும் 610 சிறுநீர் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில், மண்டலம் 5, 6 & 9 களில் 372 கழிப்பறைகளின் செயல்பாட்டை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, இனி வருங்காலங்களில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் தனியார் பங்களிப்புடன் கழிவறை செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

குப்பைகள் இல்லா நகரங்களை உருவாக்க இவ்வரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் 03.06.2022 அன்று தமிழ்நாடு முதல்வரால் துவக்கப்பட்டது. உருவாகின்ற குப்பைகளை தரம் பிரித்து அளித்தல், திடக்கழிவு மேலாண்மையில் பொது மக்கள், தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்களிப்பு மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பெருமளவில் பொது மக்கள் பங்கேற்புடன் இந்த விழிப்புணர்வு இயக்கம்  தொடங்கப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னயில் பெய்த பெரும் மழையில் தேங்கிய தண்ணீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நமது முதலமைச்சர் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு வெ. திருப்புகழ் அவர்களின் தலைமையில் பல நிபுணர்கள் அடங்கிய வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழுவினை உடன் அமைத்தார்கள்.

அதன் அடிப்படையில் சுமார் 220 கி.மீ நீளத்திற்கு ரூ.700 கோடியிலும், கொசஸ்தலையாறு, கோவளம் வடிநில பகுதிகளில் 600 கி.மீ நீளத்திற்கு ரூ.1896 கோடியிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இதனால்,  சென்னை மாநகரில், சிறிதளவு கூட தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாமல் போனது. இப்பணியினை பொதுமக்களும், ஊடங்களும் வெகுவாக வரவேற்று பாராட்டினர். வடசென்னையில் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி மற்றும் தென்சென்னையில் கோவளம் வடிநிலப்பகுதியில் எஞ்சியுள்ள  மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

சென்னை புறநகர் பகுதிகளில், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் மாங்காடு, குன்றத்தூர் திருவேற்காடு நகராட்சிகளில் 30.31 கி.மீ நீளத்திற்கு ரூ.82 கோடி மதிப்பீட்டில் 21 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.320 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும் 135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகரில் உள்ள விக்டோரியா பொதுமண்டபம் அதன் பழைய தொன்மை மாறாமல் புத்துயிர் பெறும் வகையில் ரூ.33 கோடியில்  புதுப்பிக்கப்பட்டு வருகிறது. என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

Related Stories: