கொரட்டூர் ஆவின் பண்ணையில் இருந்து பால் வினியோகத்தில் குளறுபடி: 2 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

அம்பத்தூர்: கொரட்டூரில் உள்ள ஆவின் பால்பண்ணையில் கடந்த சில நாட்களாக இயந்திர கோளாறு காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் ஆவின் பால் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பால் வினியோக தடங்கலுக்கு காரணமான உதவி பொது மேலாளர், தர உறுதி பணி மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் ஆவின் பால்பண்ணை இயங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்டங்களில் பால் வரத்து குறைந்ததால், பால்பவுடர்களை இறக்குமதி செய்து, அதன்மூலம் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவை பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே கெட்டு போய்விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையே, சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதேபோல், இன்றும் சென்னை நகரின் ஆவடி, அம்பத்தூர், நொளம்பூர், அண்ணாநகர், திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் மிகத் தாமதமாகவே வந்ததாக தகவல்கள் வெளியாகின. அதே நேரம் தனியார் பாலும் தீர்ந்து போனதால், ஏராளமான மக்கள் காலை நேரத்தில் பால் கிடைக்காமல் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தடையின்றி ஆவின் பால் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசரிடம் ஏராளமான மக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, இன்று காலை கொரட்டூரில் உள்ள ஆவின் பால்பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், இயந்திர கோளாறு காரணமாக அம்பத்தூர் பண்ணையில் சில தடங்கல்களால் பால் வினியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (பொறியியல்), உதவி பொது மேலாளர் (தர உறுதி) ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியானது. மேலும், இயந்திர கோளாறு மற்றும் பால் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிறுவன உயர் அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர்.

Related Stories: