விருதுநகர் - தென்காசி அகல மின் பாதையில் சோதனை ரயில் ஓட்டம்

விருதுநகர்: புதிதாக மின்மயமாக்கப்பட்ட விருதுநகர்- தென்காசி அகல ரயில் பாதையில் நேற்று சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர் - தென்காசி, திருநெல்வேலி - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி - தென்காசி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து, கடந்த 13ம் தேதி மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்கிடையே விருதுநகர் - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையே கடந்த ஓராண்டாக நடந்த மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கேரள மாநிலம் பகவதிபுரம் முதல் விருதுநகர் வரை நேற்று சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் மற்றும் தெற்கு ரயில்வே தலைமையக ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரயில் (டீசல்) மதியம் புனலூர் சென்றது.

அங்கிருந்து எலெக்ட்ரிக்கல்‌ லோகோவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு இடமன் சென்றடைந்தது. தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு விருதுநகரில் நிறைவடைந்தது. இடமன் - பகவதிபுரம் இடையேயான மின்மயமாக்கல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: