*போக்குவரத்து ஸ்தம்பிப்பு
நெல்லை : நெல்லை வண்ணாரப்பேட்டை பரணி நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் நீண்ட நாட்களாக உருக்குலைந்துள்ள போது் சீரமைக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று காலை திரண்டதோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பரணி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பாதாள சாக்கடை பணிகள் நடந்தன. ஆனால், பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை திரண்டு வந்து வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ‘சாலை வேண்டும்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் மகாலட்சுமி, பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷ்னர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரியின் வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள், எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கேட்டனர். பின்னர் மாநகராட்சி உதவி கமிஷனர் மகாலட்சுமி, சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஓராண்டுக்கு முன் ஏப்ரலில் சாலை போடுவோம் என்றனர், அப்போது போடவில்லை. அதன்பிறகு கடந்த டிசம்பரில் ரோடு போடுவோம் என்றனர். அதன்பிறகு ஜனவரில் போடுவோம் என்றார்கள். ஆனால் கடைசியாக சாலை இப்போது போட முடியாது என்றவுடன்தான் நாங்கள் சாலை மறியலுக்கு வந்தோம் என்றனர்.
