பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

தாம்பரம்: பத்திரப்பதிவுக்காக லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், இடைத்தரகர் ஆகிய 2 பேரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை, நியூ காலனி, 2வது பிரதான சாலையில் பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, பொறுப்பு சார்பதிவாளராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இவர், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு, ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில், கோவிலம்பாக்கம் கொளத்தூர் மாரியம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது பூர்வீக சொத்தான 1098 சதுர அடி நிலம் கோவிலம்பாக்கத்தில் உள்ளது. இவரது தந்தை கடந்த 2013ம் ஆண்டு இறந்துள்ளார். அப்போது, சரவணன் 13 வயதுடையவராக இருந்ததால் இந்த சொத்துக்கான பட்டாவில் சரவணன் பெயரும் அவருடைய தாயாரின் பெயரும் இருந்தது.  தற்போது சரவணனின் சகோதரி திருமணத்திற்காக சொத்தை வங்கியில் அடமானம் வைக்க சென்றபோது வங்கியில் செட்டில்மெண்ட் பத்திரத்தில் பெயரை மாற்றி வரும்படி கேட்டுள்ளனர். எனவே, சரவணன் நேற்று (28.3.2023) குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பெயர் மாற்றம் செய்ய சார்பதிவாளர் செந்தில்குமாரை சந்தித்துள்ளார். அப்போது, சார்பதிவாளர் செந்தில்குமார் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்து தர தனக்கு ரூபாய் 5000 லஞ்சமாக கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார். பின்னர் லஞ்ச பணத்தை ரூபாய் 2000 ஆக குறைத்துக்கொண்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் அளித்த புகாரின்பேரில், சார்பதிவாளர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். புகார் அளித்த சரவணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, சார்பதிவாளர் செந்தில்குமாரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பியதோடு, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜாய்தயாள் தலைமையில், 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே மறைந்திருந்தனர். சார்பதிவாளர் செந்தில்குமார் ரூ. 2 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், செந்தில்குமாருக்கு வழக்கமாக லஞ்ச பணம் பெற்று தரும், இடைத்தரகர் சிவகுமாரையும் கைது செய்தனர்.

Related Stories: