ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக ரூ.44 கோடியில் மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும் என்றும், 8 மாவட்டங்களில் 15 இடங்களில் ரூ.70 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளில் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்கும் வகையில் நீர் வழித்தடங்களில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உப வடிநிலத்தில் போரூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பினை நிரந்தரமாக தடுக்க 6 வெள்ளத்தடுப்பு பணிகள் ரூ.88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக, சென்னை மாவட்டத்தில் கொசஸ்தலையாறு உப வடிநிலத்திற்கு உட்பட்ட மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும். இந்த ஏரியை மேம்படுத்தி, இந்த குளத்தின் கொள்ளளவு 32 மில்லியன் கன அடியிலிருந்து 62 மில்லியன் கன அடியாக உயர்த்தப்பட்டு குடிநீர் தேவைக்காக கூடுதலாக 30 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படையிலான 2 வெள்ளத் தணிப்பு பணிகள் ரூ.106 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் இரும்பு கதவுகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.  முதல்கட்டமாக நடப்பாண்டில் 17 அணைகளின் கதவுகள் மற்றும் அதை இயக்க தேவையான இயந்திர பாகங்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் ரூ.34 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

22 மாவட்டங்களில் 123 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் கீழ் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ.100 ேகாடியே 7 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 7 மாவட்டங்களில் புதிய பெரிய பாசனத் திட்டங்களுக்கு ஆய்வு மற்றும் மட்ட அளவுகள் எடுக்கும் பணி மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.13 கோடியில் மேற்கொள்ளப்படும். சென்னை மண்டலத்தில் வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு, கட்டுமானம் மற்றும் மறுகட்டுமானம் செய்யும் 13 பணிகள் ரூ.129 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் மேற்ெகாள்ளப்படும். திருச்சி மண்டலத்தில் சேலம், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு உள்ளிட்ட 12 பணிகள் ரூ.58 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் பூண்டி, செங்குன்றம் நீர்த்தேக்கங்களில் உள்ள வெள்ளக் கதவுகளின் இயக்கம் சிறப்பு மென் பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும். இப்பணி ரூ.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.   இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: