கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் வைகுண்டபெருமாளுக்கு 5 நிலை கோபுரம், தேர்: பேரவையில் பிரபாகரராஜா வலியுறுத்தல்

சென்னை: 1,100 ஆண்டுகள்  பழமைவாய்ந்த கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் வைகுண்டபெருமாளுக்கு 5 நிலை கோபுரமும், தேரும் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் பிரபாகரராஜா எம்எல்ஏ வலியுறுத்தினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகரராஜா (திமுக) பேசியதாவது: சென்னையின் மையப் பகுதியான கோயம்பேடு பகுதியில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட வைகுண்டபெருமாள் கோபுரம் மொட்டை கோபுரமாக இருக்கிறது. அது ஐந்து நிலை கோபுரமாக மாற்றி தர வேண்டும். கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களில் மக்கள் அதிகமாக வருவார்கள். ரூ.1,500 கோடியில் சொத்துகளை மீட்டெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கோயிலுக்கு தேர் வழங்குவாரா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,”குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ஏற்கனவே கல்மண்டபம் இருக்கிறது. புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு உபயதாரர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் நிதியாக தந்திருக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்குண்டான உத்தரவை வழங்கி, நிச்சயமாக அவர் கோரிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஏற்படுத்தப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் 22021-22, 2022-23ம் ஆண்டு காலக்கட்டங்களில் சுமார் 31 தேர்கள் புதிதாக செய்வதற்கு ரூ.18 கோடியை ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த கோயிலுக்கும் இரண்டு தேர்களை உறுப்பினர் கோரியிருக்கிறார். அந்த கோயிலில் ஏற்கனவே, ரூ.6 கோடி  அளவிற்கு வைப்பு நிதி உள்ளது. இதனால் அந்த தேர் செய்கின்ற பணியும் முதல்வரின் உத்தரவினைப் பெற்று இந்த ஆண்டே மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories: