வண்ணாரப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்க பாலப் பணி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்க பால பணியை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், 53வது வார்டு போஜராஜன் நகர், சீனிவாசபுரம், மின்ட் மாடர்ன் சிட்டி பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கொருக்குப்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அங்கு ரயில்வே சுரங்கப்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு உத்தரவின்படி, இந்த பகுதியில் சுரங்க பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை விரைந்து முடிக்க ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கேட்டுக் கொண்டதன் பேரில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேற்று போஜராஜன் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தியும் சென்று, சுரங்க பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் விளக்கி கூறினார். பின்னர் ஆய்வுசெய்து பணிகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து அதிகாரிகளிடம் கமிஷனர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது துணை ஆணையர் விஷூ மகாஜன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, திமுக பகுதி செயலாளர் சுரேஷ் மற்றும் திமுகவினர், பொதுமக்கள், அதிகாரிகள் இருந்தனர்.

Related Stories: