சென்னையில் கடந்த 15 மாதங்களில் போதையில் வாகனம் ஓட்டியதாக 37 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தகவல்

சென்னை: சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 15 மாதங்களில் 37 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைக்கு முன்பு ப்ரீத் அனலைசர் கருவியை 3 முறை ஆய்வு செய்ய அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர்  நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகர காவல் எல்லையில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் வாகன விபத்துகள் குறைந்துள்ளது. கடந்த 15 மாதங்களில் சென்னை மாநகர காவல் எல்லையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 37 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாளுக்கு முன் தேனாம்பேட்டை சட்டம் -ஒழுங்கு போலீசார் சோதனையில் மது குடிக்காத நபருக்கு ப்ரீத் அனலைசர் கருவி 45 சதவீதம் மது அருந்தியதாக காட்டியது. மற்றொரு கருவியில் மது அருந்தவிலை என்று காட்டியது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தவறாக காட்டிய ப்ரீத் அனலைசர் கருவியால் அன்றைய தினம் 70 பேரிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேருக்கு தான் மது அருந்தியதாக அளவு காட்டியது. அதில் இருவர் மது அருந்தியவர்கள். ஒருவர் மது அருந்தாதவர்.

15 மாதங்களில் 37 ஆயிரம் பேர் மீது டிடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர் கூட இதுபோன்று தவறாக அளவு காட்டியுள்ளதாக கூறவில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு இனி ப்ரீத் அனலைசர் கருவியை போலீசார் பயன்படுத்துவதற்கு முன்பு குடிக்காத பொதுமக்கள் ஒருவரிடம் 3 முறை பரிசோதனை செய்த பிறகு தான் கருவியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ப்ரீத் அனலைசர் கருவி சோதனையில் 30 மில்லி கிராம் கீழ் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. போக்குவரத்து விதிமீறல்கள் பொறுத்தவரை அண்ணாநகர் பகுதியில் தான் அதிகளவில் நடக்கிறது. எம்டிசி டிரைவர்கள் ஓட்டும் மாநகர பேருந்துகள் மீது தான் அதிகளவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ப்ரீத் அனலைசர் கருவி நிறுவன அதிகாரி விளக்கம் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் ப்ரீத் அனலைசர் கருவியை ‘மெடிக்கல் சென்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் இருந்து தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து, நிறுவனத்தின் மூத்த அதிகாரி சங்கர் நாராயணன் கூறுகையில், எங்கள் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் 1 லட்சம் ப்ரீத் அனலைசர் கருவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கருவியை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

* போதையில் கார் ஓட்டியதாக 20 சதவீதம் வழக்குகள் பதிவு 2022ம் ஆண்டு 28,023 பேர் மீதும், 2023ம் ஆண்டு மார்ச் 3வது வாரம் வரை 9,878 பேர் என மொத்தம் சென்னையில் கடந்த 15 மாதங்களில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 37,901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 20 சதவீதம் பேர் கார் ஓட்டியவர்கள். மீதமுள்ளவர்கள் பைக், ஆட்டோ, கனரக வாகனம் ஓட்டியவர்கள்.

* தவறாக அளவு காட்டிய கருவி நிறுத்தம் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் தற்போது 383 ப்ரீத் அனலைசர் கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. அதில் 127 கருவிகள் 2019ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டது. அதன் பிறகு 2019 டிசம்பர் மாதம் கூடுதலாக 166 கருவிகளும், தற்போது அதிக நவீன வசதிகளுடன் 90 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது மொத்தம் 383 கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த 383 கருவியில் பிரச்னைக்குள்ள ஒரு கருவி மட்டும் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: