பாராமுகமாக இருந்த வடசென்னையை அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: அயனாவரம் சோலை அம்மன் கோயில் தெருவில்  ரூ. 75.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் சேகர்பாபு, வெற்றியழகன் எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். பின்னர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநகராட்சி பூங்காக்களையும் அழகுபடுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயன்பாடுகளும் உடைய இதுபோன்ற பூங்காக்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. பாராமுகமாக இருந்த வடசென்னையை, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார். தென் சென்னைக்கு ஈடாக வட சென்னையை மாற்றும் பணியில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். கழிவுநீர், சாலைவசதி, போக்குவரத்து நெரிசல் உள்பட அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: