கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்

அண்ணாநகர்: சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு ஏஆர்டி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிக், அந்தோணி ஆகியோர் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள கடையில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு வாடகை காரில் அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் வந்தனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஊழியர்கள், ‘‘அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் காரில் வந்தபோது சொகுசு காரில் வந்த இரண்டு பேர், தாங்கள் கொண்டு சென்ற 3 கிலோ தங்கத்தை பறித்து தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நொளம்பூரில் செயல்பட்டு வரக்கூடிய ஏஆர்டி நகைக்கடையில் ஒரு லட்சம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வாரந்தோறும் 3 ஆயிரம் வீதம் 4 வாரத்துக்கு 12 ஆயிரம் வட்டி தரப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஒருவாரமாக வட்டி பணத்தை முறையாக வழங்காமல் இருந்துள்ளனர். ஏற்கனவே நகைக்கடையில் முதலீடு செய்த ஒருவர் மூலம் 30க்கும் மேற்பட்டவர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கும் ஒரு வாரம் கடந்தும் முதலீடுக்கான வட்டி பணம் கொடுக்காமல் இருந்துள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது.

முதலீட்டு தொகையை திருப்பி தராத காரணத்தினால் நகைக் கடை ஊழியர்கள் கொண்டு சென்ற ஒரு கோடி மதிப்புக்கொண்ட 3  கிலோ தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் பறித்து சென்றுவிட்டதாக ஊழியர்கள் இரண்டு பேரும் போலீசில் பொய் தகவல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நகைக் கடை ஊழியர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: