காவல்துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3,552 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு நேற்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்களுக்கான காவலர் பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி  வெளியிடப்பட்டது. இரண்டாம் நிலை காவலர்கள் ஆயுதப்படை ஆண்கள் 1,526 பணியிடங்கள், ஆயுதப்படை பெண் 654 பணியிடங்கள் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் ஆண் 153 பணியிடங்கள், பெண் 8 பணியிடங்கள், தீயணைப்பு துறையில் 120 பணியிடங்கள் என மொத்தம் 3,552 காலியிடங்களாக அறிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இந்த தேர்வுக்கு 3,66,728 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 35 மையங்களில் நடந்தது. பிறகு சான்று சரிபார்த்தல் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு 18, 672 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். அதனபடி இரண்டாம் கட்ட தேர்வு தமிழ்நாடு முழுவதும் 21 மையங்களில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. அதில் 15,718 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், காவலர் பொது  தேர்வுக்கான முடிவுகள் நேற்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இணையதளமான https://www.tnusrb.tn.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: