அம்பை. ஏஎஸ்பி பல்வீர்சிங் விவகாரத்தில் திருப்பம் தவறி கீழே விழுந்ததில் பற்கள் உடைந்ததாக வாலிபர் வாக்குமூலம்: எஸ்ஐ உட்பட 4 போலீசாரிடமும் சப்-கலெக்டர் விசாரணை

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில், திடீர் திருப்பமாக புகார் கூறிய வாலிபர் தவறி கீழே விழுந்து பற்கள் உடைந்ததாக சப்.கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை  மாவட்டம், அம்பை அருகே  ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த  சூர்யா என்ற வாலிபர் சிசிடிவி கேமராவை  உடைத்ததாக கூறப்பட்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அம்பை ஏஎஸ்பி அந்த வாலிபரின் பற்களை  கட்டிங் பிளேயரால்  பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதே போல கல்லிடைக்குறிச்சியைச்  சேர்ந்த ஒரு வாலிபரின் பற்கள்,  அடிதடி தகராறில் புகாருக்குள்ளானவர்களின் பற்களைப் பிடுங்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் பல் பிடுங்கிய  விவகாரம் தொடர்பாக அம்பை ஏஎஸ்பி  பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பல் பிடுங்கிய சர்ச்சை தொடர்பாக, நெல்லை கலெக்டர்  கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர்  ஆலம் விசாரணையை தொடங்கினார். இதற்காக அம்பை தாலுகாவை சேர்ந்த லெட்சுமி சங்கர், சூர்யா, வெங்கடேஷ் ஆகிய மூவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 27ம் தேதி லெட்சுமிசங்கர் என்ற வாலிபர் மட்டும் சப்கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மற்ற இருவரும், கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சப்கலெக்டர் சம்மன் அனுப்பினார்.

சப் கலெக்டர் விசாரணை நேற்று காலையும் நடந்தது. அப்போது ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா, வாக்குமூலம் அளித்தார். பின்னர் வெளியே வந்த அவர், தான் தவறி கீழே விழுந்ததாலே பற்கள் உடைந்ததாக கூறினார். தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காமல் சென்று விட்டார்.  மாலை 3 மணியளவில் கல்லிடைக்குறிச்சி எஸ்ஐ ஆப்ரகாம் ஜோசப், தலைமை எழுத்தர் மற்றும் 2 பெண் காவலர்கள்  சப்.கலெக்டர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

பற்கள் பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையில், பாதிக்கப்பட்ட வாலிபர் கீழே விழுந்ததால் பற்கள் உடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  ஏ.எஸ்.பியால் பாதிக்கப்பட்டதாக கூறி சிவந்திபுரத்தை சேர்ந்த இளையபெருமாள் என்பவரது மகன்கள் செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன் ஆகிய மூவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன், ஜான் மகன் ரூபன்(எ)அந்தோணி மற்றும் சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கி மகன் சுபாஷ் ஆகிய 6 பேரும் சப்கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி புகார் அளித்துள்ளனர்.

Related Stories: