குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: அமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறைகளை அகற்றுவதற்கு அரசு முனைப்புடன் நடவடிக்கைக எடுத்து வருகிறது. இந்த அரசு பதவியேற்ற பிறகு 461 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 403 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், 16 தொழிலாளர் நல வாரியங்களை உருவாக்கி மாநிலத்தின் கடைக்கோடி சாமானியருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதால், தமிழ்நாட்டின் தொழிலாளர்களின் நெஞ்சங்களில் முதல்வர் என்றென்றும் நீங்கா இடம் பெற்றுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 12,66,126 புதிய உறுப்பினர்கள் வாரியங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களின் உதவி தொகைகளை உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது.   7.5.2021 முதல் 28.2.2023 வரையிலான காலத்தில் 9,50,456 தொழிலாளர்களுக்கு ரூ.725.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட 10,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு, நிதி உதவியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.4 லட்சம் வரை வழங்கப்படுகிறது. வந்தாரை வாழவைக்கும்  தமிழ்நாடு என்ற வழியில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோரை எந்த அளவிற்கு வரவேற்கிறோமோ  அதேபோல வெளி மாநில தொழிலாளர்களையும் வரவேற்கிறோம். அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில்  அதாவது, உணவு விடுதிகள், நகைக்கடைகள், தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், சாலைப்பணிகள், விவசாயப் பணிகள் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எவ்வித குறையுமின்றி பாதுகாப்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். வெளிமாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து  குழுக்கள் வந்து ஆய்வு செய்தன. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில ஊரக உள்ளாட்சி துறையின் செயலாளர் பாலமுருகன், வெளி மாநில தொழிலாளர்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறார்கள் என்றும், அதற்காக நாங்கள் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.

தமிழகத்தில், இதுவரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 95 மிகப்பெரிய  அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம்கள்  நடத்தப்பட்டு, 1,42,804 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம். இந்த எண்ணிக்கையை இவ்வாண்டு இறுதிக்குள்ளாக இரண்டு லட்சமாக உயர்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: