நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கேரள அரசு பணம் கேட்பதால் தடங்கல்: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசியதாவது: கிள்ளியூர் தொகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழையால், வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. எனவே, அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளுக்கு பாசனமும், குடிநீரும் வழங்கும் வகையில் சிற்றாறு பட்டணங்கால்வாய் திட்டம் காமராஜரால் உருவாக்கப்பட்டு 1971ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தர மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டது.  ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் சரிவர சீர் செய்யப்படவில்லை. எனவே, மதகுகள், ஷட்டர்கள் நவீன முறையில் சீரமைத்து கடை வரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேரக்கூடிய அளவில் தூர்வாரி சிற்றாறு - பட்டணங்கால்வாயை பாதுகாக்க வேண்டும். நெய்யாறு பாசன திட்டம் இரு கட்டங்களாக தென் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தான அரசால் திட்டமிட்டு முதலாம் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் திடீரென கேரள அரசு 2004ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தண்ணீர் விடுவதை நிறுத்தியது. தற்போது 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீர்வரத்து இல்லாததால் பாலைவனமாக இருக்கக்கூடிய அந்த கால்வாயை பாதுகாக்க வேண்டும். மேலும் இரு மாநில முதல்வர்களும் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: இதில் என்ன பிரச்னை என்னவென்றால், இரு மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு சட்டப்படி கேரளா அரசு தண்ணீர் கொடுக்க வேண்டும். இப்போது அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால், நாங்கள் கொடுக்கிற தண்ணீருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும் என்கிறார்கள். உலகத்திலேயே எந்த மாநிலமும் தண்ணீருக்கு பணம் வாங்கியது கிடையாது. அதனால் தான் பேச்சுவார்த்தை அப்படியே நிற்கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: