ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்

சென்னை: ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தாஹி என இந்தியில் எழுத ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது.

ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தாஹி என எழுதுமாறும், வேண்டுமானாலும் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தன.

இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது போல் தயிர் பாக்கெட்டுகளில் கூட இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது என தெரிவித்தன. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இந்தியில் தாஹி என்று அச்சிட முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில்; தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் இந்தியில் தாஹி என்று அச்சிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டோம்’’ என பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

Related Stories: