கதர் அங்காடிகள் இல்லாத பகுதிகளில் இளைஞர்கள் தனியுரிமை கிளைகள் அமைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் சி.மகேந்திரன் (அதிமுக) பேசுகையில், கொழுமம், கணியூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கீழ் சர்வோதயா சங்கத்தின் நூல் நூற்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. உடுக்கம்பாளையம், ஜிலோப நாய்க்கன்பாளையம், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் நெசவாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கதர் கைத்தறி மற்றும் துணி நூல்களின் புதிய கதர் நூல் நூற்பு நிலையங்கள் அமைக்க அமைச்சர் முன்வருவாரா?” என்றார். இதற்கு பதிலளித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில் ”தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தால் கதர் அங்காடிகள் இல்லாத பகுதிகளில் பொதுமக்களுக்கு காதி பொருட்கள் மற்றும் பனைப் பொருட்கள் பெற்று பயன்பெறும் நோக்கில் விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்கு தனியுரிமை கிளைகள் அமைக்க உரிமைகள் வழங்கப்படுகிறது. யாராவது தனியுரிமைக் கிளைகள் வைத்து நடத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமம் கொடுக்கிறோம்.

மடத்துக்குளம் பேரூராட்சி பகுதி என்பதால் வைப்பு தொகையாக ரூ. 20 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக உரிமம் வழங்குவோம். அந்த பகுதியில் உடனடியாக கதர்கிராம வாரியத்தினுடைய அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கிளை முறையில் விற்பனை செய்வதற்கு மடத்துக்குளம் பேரூராட்சியில் ஏற்பாடு செய்து மனுக்கள் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: