கொக்கிரகுளம், வண்ணார்பேட்டையில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுமா?

*வாகன நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் அவதி

நெல்லை : நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் வாகன  நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையை கடக்க கடும் அவதிக்கு உள்ளாகும் பாதசாரிகள் உள்ளிட்டோர் இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.  நெல்லை மாநகர்  பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சாலை மற்றும் பாலம் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக பாளை அன்புநகர் உழவர் சந்தை அருகே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டபோதும்  ரயில்வே துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மையப்பகுதி பாலம் பணி முடிக்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக  முடங்கிக் கிடக்கிறது.  இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதே போல் கடந்த 2011ம் ஆண்டில் துவக்கப்பட்ட பாளை  குலவணிகர்புரம் ரயில்வே மேம்பால திட்டம் தொடங்கிய வேகத்திலேயே அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. மீண்டும் இங்கு  பாலம் அமைக்கும் பணி தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டாலும் கடந்த 10  ஆண்டுகளில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாக உள்ளது.

 இதனால்  நெரிசலை குறைக்க தற்காலிக நடவடிக்கையாக ரயில்வே கேட் அருகே தடுப்புகள்  வைத்து ஒருவழிப்பாதையைாக மாற்றியுள்ளனர். நேரு கலையரங்கில் இருந்து  வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் வரையிலான இணைப்பு சாலை திட்டமும்  மாநகராட்சியால் துரிதப்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. இதுபோன்ற  காரணங்களால் மாநகரில் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் நேரங்களில் நடந்து  செல்வோரின் பாடு திண்டாட்டமாக மாறிவிட்டது.

 குறிப்பாக  வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை பகுதி உள்ள சந்திப்பு, கொக்கிரகுளம்  எம்ஜிஆர் சிலை சிக்னல் பகுதி. அம்பை சாலை சிக்னல் பகுதி, டவுன் ஆர்ச் பகுதி  உள்ளிட்ட இடங்களில் பல ரோடுகள் சந்திப்பதால் இந்த சாலைகளில் நடந்து  செல்பவர்கள் மறுதிசைக்கு கடக்க முடியாமல் நீண்ட நேரம் நின்றவாறு கடும்  அவதிக்கு உள்ளாகின்றனர்.

 இவ்வாறு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு குறியீடு அமைத்தாலும், போக்குவரத்து போலீசார் கண்காணித்தாலும் வாகனங்கள்  அதிவேகமாக வருவதால் நடந்துசெல்வோர் தடுமாறுகின்றனர். குறிப்பாக  பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் இந்த முக்கிய சந்திப்புகளை  கடக்கமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே இந்த பகுதிகளில் சுரங்க நடைபாதை  வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும். இதற்கான திட்ட அறிக்கையை  மாநகராட்சியின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கவேண்டும் என்பதே பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரின்  எதிர்பார்ப்பாகும். மேலும் தற்காலிக  தீர்வாக பாதசாரிகளுக்கான சாலையை கடக்கும் குறியீடுகளை அமைத்து அவர்கள்  கடப்பதற்கான நேர ஒதுக்கீட்டுடன் சிக்னல் அமைத்து கண்காணிக்கவேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: