உடன்குடி பகுதியில் பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் தாங்கைகுளம்

*கருகும் முருங்கையை பாதுகாக்க லாரி தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

உடன்குடி : உடன்குடி பகுயில் பருவமழை பொய்த்ததால் தாங்கைகுளம் வறண்டு போனது. இதனால் கருகும் முருங்கைகளை பாதுகாக்க லாரி தண்ணீரை காசு கொடுத்து வாங்கி ஊற்றி வளர்த்து வருகின்றனர். உடன்குடி பகுதியில் சுமார் 220 ஏக்கரில் தாங்கைகுளம் உள்ளது. ஆண்டுதோறும் கால்வாய் மூலமாகவோ, காட்டாற்று வெள்ளம் மூலமாகவோ இந்த குளம் நிரம்பி வந்தது. தாங்கைகுளம் நிரம்பும்போது நிலத்தடிநீர் பாதுகாக்கப்படுவதுடன், கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்கள்  வீட்டைச் சுற்றியும் முருங்கை, கறிவேப்பிலை, வாழை உள்ளிட்ட பல்வேறு  பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு சரியாக பருவமழை பெய்யாததாலும், கால்வாய் மூலம் தண்ணீர் வராததாலும் குளம் நிரம்பவில்லை. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது. நிலத்தடி நீர் நன்றாக இருந்த போது அந்த தண்ணீரை பயன்படுத்திய பொதுமக்கள், விவசாயிகள் தற்போது நிலத்தடி நீரில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக முருங்கைகள் சரிவர காய்க்காததால் லாரியில் விற்கப்படும் குடிநீரை வாங்கி முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சுப்பையா கூறுகையில், வீட்டில் உள்ள ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பயன்படுத்தினால் முருங்கை சரியாக காய்ப்பதில்லை. மற்ற பயிர்களும் உற்சாகம் இல்லாமல் வாடி வதங்கி விடுகிறது. எனவே நாங்கள் தற்போது லாரிகளில் விற்பனைக்கு வரும் குடிதண்ணீரை வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இதை தடுக்க நீர்ப்பிடிப்பு குளமான தாங்கைகுளம் உள்ளிட்ட ஊரணி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி பகுதி விவசாயத்தை பாதுகாக்க தாங்கைகுளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என்றார்.

Related Stories: