ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டே கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி ஆர்.கே.நகர் எம்எல்ஏ ஜே.ஜே. எபினேசர் பேசுகையில், ‘‘ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியை, தண்டையார்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ள இருப்புப் பாதை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எழில் நகர், நேதாஜி நகர், ஜெ.ஜெ. நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்ற மேற்குப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை எந்தவொரு வங்கிச் சேவையும் இல்லை. அங்குள்ள மக்கள் வங்கிச் சேவையைப் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அங்கு ஒரு கூட்டுறவு வங்கியினை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘உறுப்பினர் எபினேசர் இங்கே ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அந்தக் கோரிக்கையில் நியாயம் இருப்பதை ஏற்கெனவே அவர் நிகழ்ச்சி ஒன்றில் என்னிடத்திலே சொல்லியிருந்தார். நானும், துறை சார்பில் அங்கு ஒரு வங்கியை அமைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யச் சொன்னேன். அவர்களும் நல்ல சாதகமான பதிலை தந்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுக்கு இந்த வங்கிச் சேவை இல்லாத பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக கடன் வழங்குவதற்கு அவர் எடுத்திருக்கின்ற அந்த முயற்சிக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். குறிப்பாக, இந்த ஆண்டு அந்த வங்கி துவங்குவதற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Related Stories: