ஆன்லைனில் வேலை தேடிய பெண் இன்ஜினியரிடம் ரூ. 92 ஆயிரம் அபேஸ்

பூந்தமல்லி: போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (30). இன்ஜினியரிங் படித்துள்ள இவர் ஆன்லைனில் பதிவு செய்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வேலைக்காக பதிவு செய்திருந்த ஆன்லைன் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும் பகுதி நேர வேலை இருப்பதாகவும், தான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரியதர்ஷினியிடம் சாப்ட்வேர் நிறுவனத்தில் ரூ. 1.50 லட்சம் சம்பளத்தில் வேலை தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பிரியதர்ஷினியை தொடர்பு கொண்டு பேசிய பெண், அவரது செல்போனுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்த லிங்க் மூலம் ரூ. 1000 செலுத்தினால், ரூ. 1300 பெற்றுக் கொள்ளலாம் என்று, ஆசை வார்த்தை கூறினார்.  இதனை நம்பிய பிரியதர்ஷினி, உடனே அந்த லிங்கிற்கு ரூ. 1000 அனுப்பியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்று ரூ. 1300 வந்துள்ளது. பின்னர், இரட்டிப்பாக பணம் வழங்குவதாக  ரூ. 92 ஆயிரத்தை பெண் இன்ஜினியரிடமிருந்து சிறுக சிறுக மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

 இதுகுறித்து, பிரியதர்ஷினி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: