சவாரி அழைப்பது போல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம் பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (32), நேற்று முன்தினம் மாலை அயனாவரத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு, சேலையூர் வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது நண்பர் மதுபோதையில் கீழே விழுந்து கிடப்பதாகவும், அவரை வீட்டில் இறக்கிவிட வேண்டும் எனக்கூறி, ஆட்டோவை சவாரிக்கு அழைத்துள்ளார்.

அப்போது, ஆட்டோ டிரைவர் ராஜா, ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து அந்த நபரை அழைத்து வர சென்றபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர், ராஜாவை சுற்றிவளைத்து பணம் செல்போனை தரும்படி கூறி பலமாக தாக்கியுள்ளனர்.  அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டபோது, அந்த மர்ம நபர்கள், ஆட்டோ டிரைவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கையை பிடித்து இழுத்ததாகவும், அதனால்தான் அவரை தாக்கியதாகவும் கூறி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்துள்ளனர்.

இதனையடுத்து, ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து ரூ. 2500 மற்றும் செல்போன்  ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.  ஆட்டோ டிரைவர், இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: