வாகன சோதனையின்போது காவலர்களை சரமாரி தாக்கிய போதை சகோதரர்கள் கைது: கார் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூரில் வாகன சோதனையின்போது போதையில் காவலர்களை சரமாரியாக தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து, அவர்கள் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பிரகாஷ், பார்த்தசாரதி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை, அபிராமி அவன்யூ சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக காவலர்கள் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர், கீழே இறங்கி வந்து, போலீசாருடன் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவலர் பார்த்தசாரதி, இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவலர் சிவக்குமார், ஓட்டுநர் ஜோதிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.

அப்ேபாது, போதையில் காரை ஓட்டி வந்தவர், அவருடன் வந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் தகராறு செய்து, காவலர்கள் பிரகாஷ், ஜோதிராமன் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த பிரகாஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலும், ஜோதிராமன் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.  தகவலறிந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, போலீசார் மீது தாக்குதல் நடத்திய கொடுங்கையூர் அபிராமி அவன்யூ பத்மாவதி நகரை சேர்ந்த சரவணன் (29), விக்னேஸ்வரன் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், இருவரும் அண்ணன் தம்பி என்பதும், கும்பகோணத்தைச் சேர்ந்த இவர்கள் கொடுங்கையூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் தெரியவந்தது. இவர்கள், மது அருந்திவிட்டு, காரில் வீட்டிற்குச் சென்றபோது போலீசாரிடம் சிக்கி தகராறில் ஈடுபட்டு, போலீசாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: