பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் உள்பட 8 பேர் படுகாயம்: முதியவரிடம் விசாரணை

அண்ணாநகர்: கீழ்ப்பாக்கத்தில் முதியவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பெண் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (75). இவர், நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் கார்டன் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற 2 கார்கள், அமரர் ஊர்தி, ஆட்டோ மற்றும் 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது.

இதில், அங்கு நடந்துசென்ற பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். கார்கள், ஆட்டோ மற்றும் அமரர் ஊர்தி என   வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த  அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த 8 பேரை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், தாமஸ் சிகிச்சை பெறுவதற்காக மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுவிட்டு, அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதால், காரில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. விபத்தில் படுகாயமடைந்த டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜி (57), காணிக்கைராஜ் (52), பைக்கில் வந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமலதா (26),  லோகேஷ் (25), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (47) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரதீப் சாமிதாஸ் (21), அமரர் ஊர்தி டிரைவர் செந்தில்கணேஷ் (40) உள்பட 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து தொடர்பாக, அண்ணாநகர் போக்குவரத்து போலீசார், முதியவர் தாமஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: