வேப்பேரி பகுதியில் கெட்டுப்போன இறைச்சி 800 கிலோ பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் சுகாதாரமற்ற மற்றும் உண்ண தகுதியற்ற இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அங்கு புறப்பட தயாராக இருந்த வாகனத்தை மறித்து, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வாகனத்தில் 800 கிலோ அளவில் கன்றுக்குட்டி இறைச்சி இருப்பதும், அது கெட்டுப் போய் இருந்ததும் சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து, இந்த இறைச்சி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது, ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிடிபட்ட இறைச்சி கெட்டுப் போய் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. இந்த இறைச்சி நகரின் எந்தெந்த பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்,’’ என்றனர்.

Related Stories: