சென்னை விமான நிலைய உணவு ஸ்டால்களில் புறாக்களின் எச்சம்; பயணிகள் அச்சம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: சென்னை விமான நிலைய உணவு ஸ்டால்களில் புறாக்களின் எச்சத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் ஆகியவற்றில் கொரோனா காலத்திற்கு பின்பு, பயணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்துக்கு முன்பு நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே இருந்தது. தற்போது 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகள், குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளும் அதிகளவில் சென்னைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக காத்திருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உணவு ஸ்டால்கள் உள்ளன. மேலை நாட்டு பயணிகள், இந்த உணவு ஸ்டால்களில் இந்திய, தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு விமான பயணம் மேற்கொள்கின்றனர்.

அதேபோல் விமானங்களில் கொடுக்கப்படும் உணவுகளில் விருப்பமில்லாத சிலரும், இங்கு சாப்பிட்டு செல்வார்கள். இதனால் உணவு ஸ்டால்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  சமீப காலமாக இந்த உணவு ஸ்டால் பகுதிகளில் புறாக்களின் கூட்டம் படையெடுத்து வருகின்றன. கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறந்து வந்து, பயணிகள் உணவருந்தும் மேஜைகள், போர்டுகளில் அமர்ந்திருப்பது அதிகரித்து வருகின்றன. அந்த புறாக்கள் எச்சம் போடுவதும் அதிகரித்துள்ளதால், பயணிகள் அருவருப்புடன் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதியில் வெளியேறும் நிலையும் ஏற்படுகிறது.

கடந்தாண்டில், ஒமிக்ரான் நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது, ஒமிக்ரான் வைரஸ் கிருமி பரவுவதற்கு, புறாக்களின் எச்சம், புறா ரத்தம் போன்றவைகளும் ஒரு காரணம் என்று இந்திய சுகாதார துறை எச்சரித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதியில் சுற்றிய புறாக்களை கூண்டுகள் வைத்து பிடித்து வெளியேற்றினர். தற்போது மீண்டும் கொரோனா வைரஸ், இன்புளூன்சா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் புறாக்கள் அதிகரிப்பு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வந்த இந்திய பயணி ஒருவர், இந்த காட்சியை பார்த்து மனம் வெறுத்து புறாக்களை படம் பிடித்து, ‘இதுபோன்ற நிலை இருந்தால், வெளிநாட்டவர் நமது நாட்டை என்ன நினைப்பார்கள், சுத்தம், சுகாதாரம் இல்லை’ என்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு சர்வதேச முனையத்தில் மட்டும் அதிகமாக இருந்த புறாக்கள், தற்போது உள்நாட்டு முனையத்திலும் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, புறாக்களை பிடித்து அகற்ற வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

* வலைகள் அமைக்கப்படும் சென்னை விமான நிலைய அதிகாரிகள்,  ‘இங்கு பறவைகள் கட்டுப்பாடு குழு இருக்கிறது. அதன் மூலம் பறவைகளை பிடிக்க  நடவடிக்கை எடுக்கிறோம். அதோடு மீண்டும் பறவைகள் உள்ளே வராமல் தடுப்பதற்கு  வலைகளை அமைக்க இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: