சென்னை: கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள், 3 மாதத்திற்குள் வரியை செலுத்தினால், ஒரு முறை சிறப்பு நிகழ்வாக 20% வரி சலுகை வழங்க அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டம் தொடங்கியது. பின்னர், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:
நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.70 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் உள்ள பூங்காக்களையும், நீச்சல் குளங்களையும் ஒரே ஒப்பந்ததாரர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனால், மாநகராட்சிக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு துணையாக அந்த அதிகாரி இருந்துள்ளார். அந்த கருப்பு ஆடு யார் என்று நீங்கள் கண்டுபிடித்து அவர் மூலமாகவே இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.துணை மேயர் மகேஷ்குமார்: எழுத்துப்பூர்வமாக ஆணையரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விஸ்வநாதன்: ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக மேயரிடமும், ஆணையரிடமும் புகார் அளித்துள்ளேன். மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பை நீங்கள் வசூலிக்க வேண்டும். வரக்கூடிய காலங்களில் யாராக இருந்தாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒன்று அல்லது 2 பூங்காக்களை மட்டுமே ஒப்பந்தம் கொடுக்க வேண்டும். மேயர் பிரியா: அதிகாரிகள் குறித்து கவுன்சிலர்கள் எதாவது புகார்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என்னிடமோ அல்லது கமிஷனரிடமோ தனியாக தெரிவிக்கலாம். கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் சேர்ந்து தான் நாம் வேலை செய்கிறோம். அதிகாரிகளை குறைசொல்ல வேண்டாம்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த்: நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்டாக இருந்தது. கல்விக்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போதைய மாணவர்களுக்கு வரலாறு பற்றி தெரிய வேண்டியது மிக முக்கியமானது. எனவே நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர்கள் பற்றி ரிப்பன் மாளிகையில் ஒரு கண்காட்சி வைக்க வேண்டும். மாமன்ற உறுப்பினர் தனசேகரன், அம்மா உணவகம் மூலம் வருவாய் வருவதில்லை என கூறுகிறார். அம்மா உணவகம் லாபம், நஸ்டம் பாக்க கூடியது இல்லை. இதை முழுமையாக மூடுவது என்பது தவறு. அப்போது, உங்கள் பிரதமர் மோடி தான் அனைத்தையும் விற்று கொண்டிருக்கிறார், என பிற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன்: மாநகராட்சி பணிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாநகராட்சி ஒரு மருத்துவ கல்லூரி நடத்த முயற்சி செய்ய வேண்டும். திருவொற்றியூர் பகுதியில் சில மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. அனைத்து மண்டலத்தில் டயாலிசஸ் மையம் கொண்டு வர வேண்டும்.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா: இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கென பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மக்களுக்கு தேவையான மருத்துவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருக்கலாம். அதுமட்டுமின்றி பல துறை நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு துறைக்கும் நிதி என்பது குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் என்.யு.எம்.எல் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: சென்னையில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட செல்போன் கோபுரங்களையும், வரன்முறைக்கு செய்து அதன் மீது வரி வசூலிக்க வரன்முறை செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 44 ஆயிரத்து 436 சொத்துடமைதாரர்கள் ரூ. 245 கோடி வரி நிலுவையில் வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத்தொகை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு முறை சிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவைத் வைத்துள்ளவர்கள் 3 மாத காலத்திற்கு நிலுவைத்தொகை செலுத்தினால் 20% வரை வரி சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தப்படும். தமிழ்நாடு அரசால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து இணையவழியில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியினை சென்னை மாநகராட்சியில் நீக்கப்படும்.சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கணக்கிட்டு கண்காணிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். எழும்பூர் மருத்துவமனையில் ரூ. 5.89 கோடி மதிப்பில் இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள போது தாய்மார்கள் காத்திருக்கும் அறை, உணவு விடுதி உள்ளிட்ட பல்நோக்கு கூடம் கட்ட அனுமதி கோரப்படும். சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் கட்டுவதற்கும், பழைய மழைநீர் வடிகால் கால்வாய்களை இடித்து புதிதாக கட்டவும் அனுமதி அளிக்கப்படும். மாநகராட்சி மேயர் பிரியா மாமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையினை ஏற்கப்படுகிறது.* சாலைக்கு பெயர் சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு பழம்பெரும் புகழ்பெற்ற பாடகர் டி.எம்.சௌந்தராஜன் பெயர் சூட்டப்பட்டதற்கு பின் ஏற்பு அனுமதி கோரியும், மெரினா கடற்கரை காமராஜர் சாலையையும் அண்ணா சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையான அவ்வை சண்முகம் சாலையினை மெரினாவில் இருந்து ராயப்பேட்டை உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை பகுதியாக வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.* உரம் தயாரிப்புசென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 8 வரை தினமும் சேகரிக்கப்படும் 50 டன் குப்பையை மணலி குப்பை கிடங்கில் காற்று புகும் வகையில் பதனம் செய்து உரம் தயாரிக்கும் நிலையத்தை, ஒரு வருடத்திற்கு செயல்படுதல் மற்றும் பராமரித்தல் பணி வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். புதிதாக பிணவறைசென்னை மாநகராட்சி பராமரிக்கும் பல்வேறு பேருந்து செல்லும் சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். வேலங்காடு மயானத்தில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ், இறந்தோர் உடலை வைத்திருக்க பிணவறை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.