மதுராந்தகத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுராந்தகம் வட்டக்கிளை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் கருவூல அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், வட்டத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் சுதர்சன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பூங்குழலி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சரவணன், ஓய்வுபெற்ற அனைத்துத்துறை ஊழியர் சங்க வட்ட தலைவர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் கிராமப்புற நூலகர்கள் ஆகிய தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தினை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஊதிய உச்சவரம்பின்றி அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் போனஸ்  வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: