காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் லாரி மோதி துண்டான மின்கம்பம்: மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து வையாவூர் செல்லும் சாலையில், துர்க்கை அம்மன் கோயில் அருகில் போக்குவரத்து நெரிசலால், மின் கம்பத்தின் மீது லாரி மோதியதில், மின் கம்பம் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து பழைய ரயில் நிலையம் வழியாக வையாவூர், தருமநாயக்கன் பட்டறை, களியனூர், ஒழையூர், ராஜகுளம், சின்னையன் சத்திரம், சிறுவேடல், சேக்காங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். மேலும், எச்எஸ் அவென்யூ, அறிஞர் அண்ணா நகர், ரமணா நகர், சரஸ்வதி நகர், பாலாஜி நகர், செல்வகணபதி நகர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிச்செல்ல வரும், கனரக லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை சரக்கு ஏற்றிச்சென்ற லாரி துர்க்கை அம்மன் கோயில் அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி மின்கம்பம் துண்டாக உடைந்தது.  இதனால் கோனேரிக்குப்பம், அண்ணா நகர், தர்மநாயக்கன் பட்டறை, நெல்லூர், வையாவூர், நத்தப்பேட்டை பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான பழைய ரயில் நிலையம் பகுதியில் சரக்குகளை கையாளுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: