பெருங்குடியில் வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பெருங்குடியில் வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் ஒருவர் பொது இடத்தில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெய்சுந்தர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுரேஷ், சிலம்பரசன், விஜயபாபு, அருணகிரி, செந்தில்குமார், ஜெய்கணேஷ், தமிழரசன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த நபர்களை காவல்துறையினர் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளது போல் வழக்கறிஞர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என போராட்டத்தின்போது கேட்டுக் கொண்டனர்.

இதனால் திருவள்ளூர் திருப்பதி - தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னேரி: பொன்னேரியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில், 6 நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: