அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக தொண்டர்களால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட்டு, தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பொதுச்செயலாளராக என்னை அறிவித்து இருக்கிறார்கள். இதற்காக அதிமுக அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

எடப்பாடிக்கு வாழ்த்து: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் எம்பி, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏப்.5ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு விண்ணப்பம் விநியோகம்: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் முதல் முறையாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகிற ஏப்ரல் 5ம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.  புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ.10 வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: