வேளாண் துறையில் 22 மாதத்தில் பல்வேறு சாதனை இந்த ஆண்டு 1.93 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: நடப்பு  ஆண்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 600 புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 1 லட்சத்து 93,000 ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. தற்போது மொத்த சாகுபடி பரப்பு 63,48,000 ஆக அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தியில், மொத்த உணவு உற்பத்தியானது 119 லட்சத்து 97ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 11லட்சத்து 73ஆயிரம் மெட்ரிக் டன் அதிகம்.  

அதேபோன்று, குறுவை நெல் சாகுபடியானது கடந்த ஆண்டு 5 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் ஆகும். இது 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையாகும். கடந்த 2021-22ம் ஆண்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 120 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 120 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் 77,13,720 விவசாயிகள் பயன்பெற்றனர். 2022-23ம் ஆண்டு 133 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் 123 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக 10 நிலுவையில் உள்ளது.

இதன் மூலம் 77,95,708 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 119 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் எல்லாம் விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் அறிவிப்புகள். விவசாயிகள் வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை இந்த ஆண்டு உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். அதன்படி, இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் விவசாய உற்பத்தி தொடர்பான பயிற்சி பெற 180 விவசாயிகள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். வெளிநாடுகளில் பயிர் செய்யும் முறைகளை கற்கும் வகையில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: