தமிழகத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்தால் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வருகிறது பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269க்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: அ.தி.மு.க. 2011 தேர்தலின்போது அளித்த 184 வாக்குறுதிகளையும், 2016 தேர்தலின்போது அளித்த 321 வாக்குறுதிகளையும் சேர்த்து, 507 வாக்குறுதிகளில் இதுவரை அரசாணை வெளியிட்டுள்ளது 269க்குத்தான். தென்தமிழகத்தில் Aero park வைக்கிறேன் என்றார்கள், மதுரையில், தாய் தமிழுக்கு சிலை வைக்கிறேன் என்றார்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைபேசி விலையின்றி வழங்கப்படும் என்றார்கள்.  ஆனால் செய்யவில்லை. அதிமுக வாக்குறுதியில் இல்லாத திட்டத்தையும் நமது முதல்வர்  செய்துகாட்டியிருக்கிறார்.

சில மாற்றங்களை செய்யும்போது அரசியல் ரீதியாக அதிகமான எதிர்ப்பு வருகிறது. இது நம்முடைய செயலை ஓரளவிற்கு பாதிக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்; எத்தனையோ காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டண உயர்த்தப்பட்டது. அதாவது ஏழை, எளிய மக்களுக்கு எந்த சதவிகித மாற்றமும் இல்லை; என்னை மாதிரி நபர்களுக்கு 60 சதவிகிதம், 80 சதவிகிதம் வரை எங்களுடைய கட்டணம் உயர்ந்தது. இதுதான் சமூக நீதி. இது சமூக நீதிக்கு எந்த வகையிலும் ஏற்புடையாகாதது இல்லை.  

இதை செய்கையில் எல்லோரும் விமர்சிக்கும்போது, நான் கூற வருவது, 2006-2007ல் ஒரு ரூபாய் மதிப்பு இருந்தது, பண வீக்கத்தினால் இன்றைக்கு 2.91 ரூபாய். பண வீக்கம் கிட்டத்தட்ட ஒரு ரூபாயினுடைய மதிப்பை 3 மடங்கு வீக்கமாக்கிய பிறகு, நாம் வாங்குகிற பணம் இன்னும் 2010, 2011 லெவலிலேயே வாங்கும்போது, என்ன பிரச்னை வருகிறது என்றால், நம்முடைய செலவுகளெல்லாம் இன்றைக்கேற்ற அளவில் வந்துவிடுகிறது. அன்றைக்கு இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடியது 28 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய். அப்படியென்றால் பொருளாதாரம் கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்து, பண வீக்கம் கிட்டத்தட்ட 3 மடங்கு ஏறி, அதற்கு பிறகும் கட்டணத்தை மாற்றக்கூடாது என்றால், எப்படி இந்த அரசாங்கம் எங்கேயாவது சம்பாதித்து, பொதுமக்களுக்கு செலவு செய்ய முடியும்?

ஆவினில் நாங்கள் விலையை குறைத்ததும் விவசாயிகள், பால் உற்பத்தி செய்பவர்கள் விலையை அதிகரிக்க வேண்டுமென்று சொன்னவுடன் மாதத்திற்கு 15, 20 கோடி ரூபாய் லாபம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆவின், இன்றைக்கு 20, 25 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து கொண்டே போகிறது. எனவே, சீர்திருத்தம் செய்யும்போது உண்மையிலேயே எது சமூகநீதிக்கு ஏற்புடையது என்று சிந்தித்து உரையாட வேண்டியது அரசியல்வாதிகளுடைய கடமை. விவசாயம் என்று சொல்லிக் கொண்டு, கிட்டத்தட்ட 33% தவறான பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்டு, அதனால் மாநிலத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.3,500 கோடி நஷ்டம். 10 சென்ட் இடத்துக்கு 50 எச்பி மோட்டார் வைத்திருக்கிறார்கள். அதனால், திருத்தம் கொண்டு வரும்போது, திட்டமிட்டு நாங்கள் செய்கின்ற செயலை, அநாவசியமாக அரசியல்ரீதியாக இதை தவிர்க்க யாரும் முன்வர கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

* அதிமுக ஆட்சியில் 27% வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டது

அதிமுக ஆட்சியில் விதி 110ன்கீழ் மட்டும் 3,27,157 கோடி ரூபாய் அளவிற்கு, 1,204 அறிவிப்புகள் வழங்கப்பட்டு, அதில் வெறும் 87,405 கோடி ரூபாய்க்குத்தான், அதாவது 27 சதவிகிதம்தான் செயல்படுத்தப்பட்டது. அதை ஒப்பிட்டு பார்க்கும்போது, எங்கள் தலைவர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதுவரைக்கும் ஆளுநர் உரையில் அறிவித்த அறிவிப்புகள் 78. முதல்வர் செய்தி வெளியீடாக அறிவித்தது 161, முதல்வரின் இதர அறிவிப்புகள் 46, விதி 110ன்கீழ் அறிவிப்புகள் 67, முதல்வரின் மாவட்ட அறிவிப்புகள் 88, மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் அறிவித்தது 5, கடந்த 3 ஆண்டுகளாக நடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது 338, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது 330. அப்படியானால் சிந்தித்து பாருங்கள், முழு நிதிநிலை அறிக்கையில் மொத்தமாக 338 அறிவிப்புகள்தான். ஆனால், வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் மட்டும் 330  அறிவிப்புகள். அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின்போது அறிவித்தவை 2,424  அறிவிப்புகள். இவை எல்லாம் சேர்த்து 3,537 அறிவிப்புகள். அவற்றில் 3,038  அறிவிப்புகள், அதாவது 86% அறிவிப்புகளுக்கு அரசாணைகள்  வெளியிடப்பட்டிருக்கின்றன என்றார்.

Related Stories: