மகளிர் சுயஉதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க அனுமதி: இந்தாண்டு ரூ.30,000 கோடி கடன் இலக்கு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசுகையில் “மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவன செய்யுமா?” என்றார். இதற்கு பதில் அளித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுய உதவி குழுக்கள் நேரடி வங்கி கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம்  மாதம் ஒரு முறை, 6 மாதங்கள் தவறாமல் குழு கூட்டங்களை நடத்தி  சேமிப்பு செய்து உள்கடன் வாங்கி குறித்த காலத்தில் உள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். அவ்வாறு உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுய உதவி கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக கடன்  உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக் குழுவினரின் வங்கி கணக்குகளுக்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.

21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022-23ம் நிதி ஆண்டில் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட இலக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் நாங்கள் இலக்கை விட அதிகமாக 25 ஆயிரம் கோடியே 19 லட்சம் ரூபாய் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி அளித்துள்ளோம். இதன் மூலம்  4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளன.

இந்த ஆண்டு 2023-24ம் நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் அதை உயர்த்தி இலக்கு 30 ஆயிரம் கோடியாக  அறிவித்துள்ளார். கண்டிப்பாக இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிகமாக வங்கி கடன் உதவி வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் தான் முதல் முதலாக கலைஞர் ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. எனவே, இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடனை, இந்த அரசாகட்டும், தமிழக முதல்வராகட்டும்  இதை நாங்கள் கடனாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம். எனவே கண்டிப்பாக இந்த அரசு விரைந்து செய்து முடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.கே.மணி: இந்த நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5 ஆயிரம் கோடி அதிகம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 நாட்களில் கடன் உதவி வழங்கப்படும் என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல அமைச்சர், மேலும் உயர்வு பெற்று நல்ல பணிகளை மேம்படுத்த வேண்டும். பணி சிறக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: