54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2,753 கோடியில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்வு: அமைச்சர் பொன்முடி தகவல்

கேள்வி நேரத்தின் போது வானூர் சக்கரபாணி (அதிமுக) பேசுகையில், “வானூர் ஒன்றியத்தில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா?’’ என்றார். இதற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த இருக்கிறோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2,753 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது. ரூ.120 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் நிச்சயமாக பாலிடெக்னிக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர்களுடைய சேர்க்கை அதிகரிப்பதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நிதி மட்டும் இதற்கு காரணம் அல்ல, மாணவர்களுடைய சேர்க்கை, தரத்தை பொறுத்துதான் கல்லூரிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories: