எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக டெய்லரிடம் ரூ.5 லட்சம் மோசடி நடிகர் ஜெமினி கணேசன் பேரனின் மனைவியை கைது செய்ய போலீஸ் தீவிரம்: தனியார் மருத்துவ கல்லூரியின் பெயரில் போலி ரசீது தயாரித்ததும் அம்பலம்

சென்னை: பெண் டெய்லர் ஒருவரின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல நடிகர் ஜெமினி கணேசன் பேரனின் மனைவி மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

 சென்னை தி.நகர் ஆர்காட் தெருவை சேர்ந்தவர் மஞ்சு(35). இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி புகார் ஒன்று அளித்தார். எனக்கு திருமணமாகி லாவண்யாஸ்ரீ, துளசிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நான் குடியிருக்கும் வீட்டிலேயே டெய்லரிங் கடை நடத்தி வருகிறேன். எனது கடையின் வாடிக்கையாளர் அபர்ணா. இவர் பிரபல நடிகர் ஜெமினி கணேசன் பேரன் அபிநய்யின் மனைவி. அபர்ணா தனியாக ஜவுளி கடை ஒன்று நடத்தி வருகிறார்.

அவரது கடைக்கு பெரும்பாலான துணிகளை நான் தான் வடிவமைத்து தைத்து தருகிறேன்.எனது மூத்த மகள் லாவண்யாஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். எனது மகளுக்கு பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவாக  அபர்ணா ஆசை வார்த்தை கூறினார். இதற்காக அபர்ணா கடந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி அவரது நண்பர் அஜய் ராஜகோபால் என்பவர் மூலம் பிரபல மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.20 லட்சம் பணம் செலவாகும் என்றும், முன் பணமாக ரூ.5 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அதன் படி அபர்ணா கொடுத்த வங்கி கணக்கிற்கு நான் ரூ.5 லட்சம் பணம் கட்டினேன். சில நாட்கள் கழித்து தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து பணம் கட்டியதற்கான ரசீதை அபர்ணா எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார்.

பின்னர் அபர்ணா அனுப்பிய ரசீதை எடுத்து கொண்டு எனது மகளை சேர்க்க அவர்கள் கூறிய தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்று காட்டிய போது, இது எங்கள் மருத்து கல்லூரியில் கொடுக்கும் ரசீது கிடையாது, போலியானது என்று கூறி அனுப்பிவிட்டனர். அபர்ணாவிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் தரவில்லை. என்னிடம் துணிகளை தைத்து கொண்டு அதற்கான கூலியான ரூ.50 ஆயிரமும் தராமல் ஏமாற்றிவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி, மாம்பலம் போலீசார் விசாரணை நடத்திய போது, நடிகர் ஜெமினி கணேசன் பேரன் மனைவி அபர்ணா, பெண் டெய்லரிடம் ரூ.5 லட்சம் பணம்பெற்று மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக தனது நண்பர் உதவியுடன் ஏமாற்றியது தெரியவந்தது. தனியார் மருத்துவ கல்லூரியின் பெயரில் போலி ரசீதுகளை தயாரித்து அதன் மூலம் ஏமாற்றியதும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து அபர்ணா அபி மற்றும் அவரது நண்பர் அஜய் ராஜகோபால் ஆகியோர் மீது மாம்பலம் போலீசார் நேற்று முன்தினம் ஐபிசி 403, 406, 420, 465, 471, 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த அபர்ணா தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: