சென்டம் குறையும் பிளஸ் 2 கணக்குத் தேர்வு கடினம்: விடை எழுத திணறல்

சென்னை: பிளஸ் 2 வகுப்பு கணக்குப் பாடத்தில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் திணறினர். பிளஸ் 2 கணக்குபாடத் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அதில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்ததுடன், நன்றாக படிக்கும் மாணவர்களாலேயே சென்டம் எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவர்கள் இதற்கு முந்தைய வகுப்புகளில்(10, பிளஸ் 1) படிக்கின்ற போது கொரோனா அச்சத்துடன் தான் பிளஸ் 2 வகுப்பில் புத்தகம் முழுவதையும் படித்தனர்.

இந்த குறைகள் உள்ள மாணவர்களுக்கு கேள்வித்தாளை வடிவமைக்கும் போது, நேரடியான கேள்விகள், எளிமையான கேள்விகள், எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் ஆகியவற்றை கொண்டுதான் கேள்வித்தாள் வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி கேள்வித்தாள் அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நேற்று முன்தினம் வழங்கப்பட்ட கணக்குப் பாடக் கேள்வித்தாளை பொருத்தவரையில், பகுதி 1ல் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் கேள்விகளில் 1 மற்றும் 13ம் கேள்விகள் பாடம் ஒன்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இவை, concept, summary ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் பரவாயில்லை. 14, 14ம் எண் கேள்விகள் creative-ஆக கேட்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஒரு மதிப்பெண் என்றாலும் 3 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் போல உள்ளன. புத்தகத்தில் பாடம் 4ல் இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 3வது கேள்வியை மாணவர்கள் கணக்குப் போட்டுத்தான் விடை எழுத முடியும், 19வது கேள்வி பாடத்தில் உள்ள எடுத்துக்காட்டு பகுதியில் இரு்ந்து கேட்கப்பட்டுள்ளது.

பாடம் 5ல் ஒரு கேள்வி கிரியேட்டிவாக கேட்கப்பட்டுள்ளது. பாடம் 7ல் இருந்து 4 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று கிரியேட்டிவாக கேட்கப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் போட்டுப்பார்த்துத்தான் விடை எழுத வேண்டும். பாடம்9ல் இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்று கிரியேட்டிவாக கேட்கப்பட்டுள்ளது. 10வது பாடத்தில் இருந்தும் கேட்கப்பட்ட கேள்வியும் கிரியேட்டிவ். அதாவது பகுதி ஒன்றில் இடம் பெற்ற கேள்விகளில் 9 கேள்விகள் கிரியேட்டிவ் கேள்விகள்.

அதில் 6 கேள்விகளை எடுத்துக் கொண்டால், 2 மற்றும் 3 மதிப்பெண்கள் பகுதியில் இடம் பெற வேண்டிய கேள்விகளாக உள்ளன.

ஒரு மதிப்பெண் கேள்விகளில் இத்தனை கேள்விகள் போட்டுப் பார்க்கும் வகையில் கேட்கப்பட்டால் மாணவர்கள் குறைந்த நேரத்தில் எப்படி விடை எழுதுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்களே இதில் திணறுவார்கள் என்றால் சாதாரண மாணவர்கள் என்ன செய்வார்கள். குறிப்பாக, வாய்ப்பு (option) வகைகளை தான் மாற்றி மாற்றி தருகிறார்கள் என்றால் இப்படி கணக்காகவே கொடுத்தால் மாணவர்கள் என்ன செய்வார்கள். கிரியேட்டிவ் என்று கூறிக் கொண்டு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இருந்து சில கேள்விகளை அப்படியே கேட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடப்பகுதிகளே அதிகமாக உள்ள நிலையில், மாணவர்கள் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களையும் இனி படித்தால் தான் 100 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, கணக்குக் கேள்வித்தாளில் பகுதி2 மற்றும் பகுதி 3 ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன பகுதி 1ஐ விட மோசமாக கேள்விகள் இடம் பெற்றுள்ளன என்று கூறவேண்டும். பகுதிகள் 2 மற்றும் 3ல் கட்டாயமாக விடை எழுத வேண்டிய கேள்விகள் என்று 30 மற்றும் 40வது கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே கிரியேட்டிவ் வகைதான். இந்த இரண்டு கேள்வியும் ஆசிரியர்களையே அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றன.

3 மதிப்பெண்ணுக்கான கேள்விகளில் 40வது கேள்வி கடினம். பகுதி4ல் இடம்பெற்ற 5 மதிப்பெண்ணுக்கான கேள்விகளில் 47வது கேள்வியில் இடம் பெற்ற ஏ மற்றும் பி ஆகியவை இரண்டும் கடினம். அதிலும் ‘பி’ பிரிவு கேள்வியில் பாதிதான் இடம் பெற்றுள்ளது. மீதி எங்கே என்று தெரியவில்லை. இது சிபிஎஸ்இபாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. பகுதி-4ல் முதல் 6 கேள்விகளில் உள்ள ஏ மற்றும் பி வகை கேள்விகள் எல்லாம் எதிர்பார்த்த கேள்விகள்தான். மொத்தமாக பார்க்கும் போது பாடப்புத்தகத்தில் பாடம் 8ல் இருந்து 2 மதிப்பெண் கேள்விகள்1, 3 மதிப்பெண் கேள்வி 1 கேட்கப்பட்டன.

இவை தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. ஒரு மதிப்பெண் கேள்விகூட இடம்பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கிரியேட்டிவ் என்ற பெயரில் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகளை கேட்டு மாணவர்களை வருத்தியுள்ளனர். மிகவும் சராசரியாக படிக்கும் மாணவர்களுக்காக உள்ள பாடங்களான 1, 2, 3, 4 ஆகியவற்றில் இருந்து கிரியேட்டிவ் கேள்விகள் இடம் பெற்றுள்ளன. பாடம் 8ல் பயிற்சிப் பகுதியில் இருந்து சில கேள்விகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்த பாடத்தில் இருந்து 5 மதிப்பெண்ணுக்கான கேள்வி ஒன்றுகூட இடம் பெறவில்லை.

* கூடுதல் மதிப்பெண் கிடையாது தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 வகுப்பு முடித்த பிறகு இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரும் போது பிஎஸ்சி கணக்கு பாடத்தை மாணவர்கள் எடுக்க முன்வர மறுக்கிறாகளே என்று வருத்தப்படுகிறோம். ஆனால் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களுக்கு இப்படி அச்சத்தை ஏற்படுத்தினால் கணக்குப் பாடம் படிக்க மாணவர்கள் எப்படி வருவார்கள். இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு கணக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நாம் உருவாக்க முடியாது. இதை அரசு மட்டும் அல்லாமல் ஆசிரியர்களும் பெற்றோரும் உணர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

நேற்று முன்தினம் நடந்த கணக்குத் தேர்வில் இ டம் பெற்ற கேள்வித்தாள் சாதாரண மாணவர்களுக்கு பெரும் சவாலாகத்தான் இருந்தது. நன்றாக படிக்கின்ற மாணவர்களே இந்த தேர்வில் செண்டம் எடுப்பது கடினம். அதனால் இந்த ஆண்டு கணக்குப் பாடத்தில் அதிக அளவில் மாணவர்களின் தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கேள்வித்தான் முறையாகத்தான் உள்ளது. கடினமான கேள்விகள் இல்லை. அனைத்து கேள்விகளும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதனால், கூடுதல் மதிப்பெண் வழங்கும் திட்டம் தேர்வுத்துறைக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Related Stories: