குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதுபோன்ற சந்தேகம் இளைய சமுதாயத்தினரிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் முடிவுகளை அறிவித்து பணியாளர்களை நியமிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உண்டு. ஆனால், தொடர் குளறுபடிகள் நடந்து வருவது வேதனைக்குரியது. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: