பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்

திண்டிவனம்: பாமக தலைவர் பதவியில் இல்லாத அன்புமணிக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரமும் இல்லை. அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது சட்டவிரோதமானது. எனவே அன்புமணி மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பாமவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் முற்றியதையடுத்து கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அன்புமணி சார்பில் பாமகவில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணியில் அன்புமணி பாமகவுக்கு 17 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் கடுப்பான ராமதாஸ், பாமக சார்பில் போட்டியிடுவோர் தைலாபுரத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் விருப்ப மனுக்களை தொடங்கி வைத்து பேட்டியளித்த ராமதாஸ், ‘‘பாமகவை உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரம் இல்லை, அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அதிமுக-அன்புமணி கூட்டணி என்பது தெருக்கூத்து நாடகம், அன்புமணி எங்கே யாரை நிறுத்தினாலும் பாமகவினர் மட்டுமல்ல, யாரும் ஓட்டு போட மாட்டார்கள், தந்தைக்கு துரோகம் ெசய்த நபரை, தந்தையிடமிருந்து கட்சியை அபகரிக்க முயற்சிப்பவரை நம்பி யாரும் வாக்களிக்க மாட்டார்கள், அதிமுக அன்புமணியுடன் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு, அவர் யாருடன் கூட்டணி பேசினாலும் அது செல்லாது. நான்தான் கூட்டணி அமைப்பேன்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி முதல் பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவி நடத்தி வருகிறேன். இது ஒரு பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இதன்மூலம் அதிகப்படியான எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒன்றிய அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளோம். ஆனால் அன்புமணி கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் (28/5/2022 முதல் 28/5/2025 வரை) தேர்தல்களில் மோசமான செயல்திறன் காரணமாக கட்சி அங்கீகாரத்தை இழந்தது. அதே நேரத்தில் அன்புமணி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மோசடியான போலி ஆவணங்களை சமர்ப்பித்து தலைவர் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். இது கட்சியின் விதிகள், துணைவிதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றபோது, அன்புமணி இந்திய தேர்தல் ஆணையத்தால் தலைவராக அறிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் அன்புமணி பாமகவின் தலைவராக உரிமை கோர முடியாது. அதேபோல் நான் கட்சியின் நிறுவனர் என்பதால், கட்சியின் நியமன விதிகளின் படி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி (தொடர்பு தேதி 27/11/2025) நான் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதியிட்ட ஆவணங்களின்படி, யாரும் உரிமை கோராத நேரத்தில், யாராவது தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தால், அன்புமணியின் பதவிக்காலம் தானாகவே முடிவடைகிறது. அதன்படி, தற்போது அலுவலகம் இல்லாத எண் 10: திலக் தெரு முகவரி உட்பட அனைத்தும் கடந்த மே மாதம் 30ம் தேதியே முடிவுக்கு வந்துவிட்டது. இதைத் தவிர, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 27ம் தேதியிட்ட தனது அறிக்கையில் அறிவுறுத்தியபடி, அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத நிலையில், உரிய அரசியல் வழிகாட்டுதல்படி ராமதாஸ் ஆகிய நான் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை பாமக தலைவராகப் பணியாற்றி வருகிறேன்.

எனவே, என்னைத் தவிர, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட எந்தக் கட்சியுடனும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை. அன்புமணி அதிமுகவுடன் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது. என்னையும் எனது கட்சியையும் ஆள்மாறாட்டம் செய்ததற்காக, அன்புமணி மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அன்புமணி மற்றும் பிறர் அரசியல் ஆதாயத்துக்காக எனது அங்கீகாரம் இல்லாமல் கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கீகரிக்கப்படாத நபர்களிடம், மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரியப்படுத்தி நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல்களை தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபி, உள்துறை செயலர் ஆகியோருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ளார்.

‘பாஜவுடன் பேச்சு இல்லை’
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக சமூக ஊடக பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் ராமதாசிடம், யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்துள்ளீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, கூட்டணி குறித்து பேசி கொண்டிருக்கிறோம் என்றார். பாஜ பேச்சுவார்த்தை நடத்தியதா? என்றதற்கு, இதுவரை பேசவில்லை என்றார்.

Related Stories: