மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டம் மூலம் அரசு பேருந்துகளில் இதுவரை 258 கோடி பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டம் மூலமாக இதுவரை அரசு பேருந்தில் 258 கோடி பேர் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

 சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கோபால், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தனி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. அதன்படி, இதுவரை மகளிர் 258.06 கோடி பேர் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.888 மாதச்செலவில் சேமிப்பதாக மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கட்டணமில்லா பயண வசதியினை திருநங்கைகளுக்கு விரிவுப்படுத்தியதன் வாயிலாக 14.75 பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இணையவழிப் பயணச் சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 6,615 பயணிகள் பயன் அடைந்துள்ளனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ‘அரசு பஸ்’ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அலகுகளை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

Related Stories: