தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்; மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களையும் திறந்தார்

சென்னை: தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். ரூ.15 கோடியில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் மற்றும் முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2021 செப்.22ம் தேதி “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது, தமிழ்நாட்டில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்” உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலுள்ள துறை அலுவலர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி இரண்டு மாதங்களில் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் ரூ.1.32 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை வசதிகளை முதல்வர் திறந்து வைத்தார். குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் 3.29 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ-யின் அதிநவீன கலவை மற்றும் சிப்பம் கட்டும் அலகு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் ரூ.1.35 கோடி செலவில் 4,825 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கு அறை, மருந்தகம், நிர்வாக அலுவலகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொதுவசதி மையக் கட்டிடம், திருமுல்லைவாயல் தொழிற்பேட்டையில் ரூ.2.93 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ.2.72 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டிடம், காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ.2.92 கோடி செலவில் 9,000 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மூலப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு, கருத்தரங்கு அறை, சேவை அறை, அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொது உற்பத்தி மையக் கட்டிடம் என மொத்தம் ரூ.15 கோடி செலவில் பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெடுங்காலமாக தொழிற்பேட்டைகளில் பட்டா பெற காத்திருந்த ஒதுக்கீட்டாளர்களுக்கு சிறப்பு முன்னெடுப்பு மூலம் பட்டா வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக 210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை தொடங்கி வைத்து, அதில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு முதல்வர் பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: