போதையில் இருப்பதை பரிசோதிக்கும் கருவி பழுதால் வந்த குழப்பம் போலீசாரிடம் தொழிலதிபர் வாக்குவாதம்

சென்னை: சென்னையில் விபத்துகளை தடுக்கும்  வகையில் மாநகரம் முழுவதும் இரவு நேரங்களில் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு  போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் தேனாம்பேட்டை சட்டம் -ஒழுங்கு போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வடபழனி நோக்கி கார் ஒன்று வந்தது.  அதை மறித்த போலீசார் காரில் இருந்த நபரிடம் மது குடித்துள்ளாரா என்று  ‘ப்ரீத் அனலைசர்’ கருவி மூலம் சோதனையிட்டனர்.

அதில், அந்த நபர் 45 சதவீதம் மதுபோதையில் இருப்பதாக கருவியில் அளவு காட்டியது. அதை தொடர்ந்து போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர்  தீபக் (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது காரை ஓட்டி வந்த தொழிலதிபர், ‘எனக்கு சிறு வயதில் இருந்து மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லை சார்’ என்று உதவி  ஆய்வாளரிடம் கூறினார். அதற்கு சோதனை செய்த உதவி ஆய்வாளர், கருவியில்  நீங்கள் 45 சதவீதம் ஆல்கஹால் குடித்து இருப்பதாக காட்டுகிறது என்று கூறி, வழக்கு பதிவுக்கான சலானை தொழிலதிபர் கையில் கொடுக்க முயன்றார்.

ஆனால்  தொழிலதிபர், நான் குடிக்கவில்லை சார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வாங்க கே.எம்.சி. மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரியை பரிசோதனை செய்யலாம் என அழைத்தார். ஆனால், போலீசார். இதுதான் எங்களுக்கு சான்று என்று கூறினர். ஒரு கட்டத்தில் தொழிலதிபரும் நான் குடிக்கவில்லை என் மீது எத்தனை வழக்கும் போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலையில் தகராறு நடந்ததால் வாகன ஓட்டிகள் அனைவரும் கூட்டமாக கூடினர்.  

பிறகு வேறு வழியின்றி போலீசார் வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் இருந்து ‘ப்ரீத் அனலைசர்’ கருவியை கொண்டு வந்து, தொழிலதிபரிடம் சோதனை செய்த போது, மதுகுடிக்கவில்லை என்று அளவு காட்டியது.  இதனால் குழப்படைந்த போலீசார் தொழிலதிபரிடம் மீண்டும் மீண்டும் சோதனை செய்தும் அவர் மது குடிக்கவில்லை என்றே அளவு காட்டியது. இதையடுத்து தொழிலதிபரிடம் முதலில் சோதனை செய்த கருவியில் தான் பழுது இருப்பதை உணர்ந்த  போலீசார், லாவகமாக தொழிலதிபரிடம் பேசி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்து சமூக  வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதேபோல், சம்பந்தப்பட்ட தொழிலதிபரும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து உயர் அதிகாரிகள்  உத்தரவுப்படி பழுதான ப்ரீத் அனலைசர் கருவியை போலீசார் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: