ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பைக்கில் கடத்திய கள்ளச்சாராயம் பறிமுதல்-5 கி.மீட்டர் தூரம் துரத்தி பிடித்தனர்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பைக்கில் கடத்திய 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து உத்தரவின்பேரில் எஸ்ஐ மகேந்திரன், முதல்நிலை காவலர் மகாபிரசாத் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, மர்மநபர் ஒருவர் பைக்கில் வேகமாக சென்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை துரத்த ஆரம்பித்தனர்.

மர்மநபரை நெருங்கிய போது அவர் பயந்து போய் சின்னபள்ளிகுப்பம் மலையடிவாரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டுக்குள் தப்பிச்சென்றார். சுமார் 5 கி.மீட்டர் சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்றனர். பின்னர், பைக்கை சோதனை செய்த போது 5 லாரி டியூப்களில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, பைக்குடன் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

பைக்குக்கு நெம்பர் இல்லாததால் பைக் திருட்டு வண்டியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் கள்ளச்சாராயம் கடத்தியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எங்கிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டது என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: