பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் சான்றிதழில் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் உதவித்தொகை நிறுத்தம்-மக்கள் குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் முறையிட்ட பெண்

வேலூர் : பிறவியிலேயே மனவளர்ச்சி  குன்றிய சிறுமியின் சான்றிதழ் புதுப்பித்தலின்போது இடையில் ஏற்பட்ட பிரச்னை என்று மாற்றப்பட்டதால் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக கூறி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மகளுடன் வந்த பெண் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டிஆர்ஓ ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேலூர் டோல்கேட் அண்ணா நகரை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது 11 வயது மகளுடன் வந்து கண்ணீருடன் அளித்த மனுவில், எனது மகள் சீ.மோனிகா பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவள். அதற்கான சான்று வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2014ம் ஆண்டு வழங்கப்பட்டது. என் மகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹1,000ம், எனக்கு பராமரிப்பாளருக்கான உதவித்தொகை ₹1,000ம் என ₹2,000ம் வழங்கப்பட்டு வந்தது.

இச்சான்றை புதுப்பிப்பதற்காக சமீபத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது பலமுறை அலைக்கழிக்கப்பட்ட பின்னர், என் மகளுக்கு இடையில் ஏற்பட்ட மனநல பாதிப்பு என்று குறிப்பிட்டதால் உதவித்தொகை எங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கணவரை இழந்துள்ள நான், மகளை பராமரிப்பதற்காக எங்கும் பணிக்கு செல்லாமல், அருகில் உள்ள வீடுகளில் சென்று வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறேன். எனவே, எனது மகளுக்கான உதவித்தொகையும், பராமரிப்பு உதவித்தொகையும் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் பேரணாம்பட்டு தாலுகா செண்டத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையையும், பாரையும் அகற்ற வேண்டும் என்று அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க தன்னார்வ சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த மனுவில், ‘இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 30 சிறப்பு பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள், கணக்காளர், எழுத்தர் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள், உதவியாளர்கள் என 100 பேர் பணியாற்றி வருகிறோம். பயிற்சி மையங்களும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. தற்போது இப்பயிற்சி மையங்கள் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும். திட்டம் நிறுத்தப்படுவதாகவும் கடந்த 18ம் தேதி திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எனவே, எங்களுக்கான 21 மாத மதிப்பூதியம், கட்டிடங்களுக்கான 9 மாத வாடகை ஆகியவற்றை வழங்க வேண்டும். எங்களுக்கான வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதேபோல் வேலூர் பெரியார் பூங்காவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி பெரியார் பூங்கா போராட்டக்குழுவினர் மனு அளித்தனர். இக்கூட்டத்தில் மேலும் மனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள், வங்கி கடனுதவி, போலீஸ் பாதுகாப்பு மற்றும் பொதுபிரச்னைகள் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. இம்மனுக்கள் மேல்நடவடிக்கைக்காக துறைசார் அலுலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தர்ணாவில் ஈடுபட்ட சகோதரர்கள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் தொடங்கியதும், குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியை சேர்ந்த பழனி, கார்த்திகேயன் ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பட்டா வழங்கவில்லை. 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதாக கூறி திடீரென காயிதே மில்லத் கூட்ட அரங்கம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த டிஆர்ஓ ராமமூர்த்தி அவர்களிடம், மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக இப்படி உட்காரக்கூடாது என்று கண்டித்தார்.

Related Stories: