வீட்டுமனையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதால் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி-திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, விவசாயி தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல், ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், பட்டா மாற்றம், கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, சுய தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 482 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்களில் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் முதல் தளத்திற்கு வர இயலாது என்பதால், அவர்கள் காத்திருந்த கலெக்டர் அலுவலக தரை தளத்துக்கு கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தன்(48) என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது, திடீரென டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், தட்டிக்கேட்டதால் தன்னையும், குடும்பத்தினரையும் தாக்கியதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருப்பதாகவும், ஆனாலும் ெதாடர்ந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், செங்கம் தாலுகா, கரியமங்கலம் அடுத்த அண்டம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்த போலீசார் விவசாயி மற்றும் அவரது குடும்பத்தை அழைத்து சென்றனர். குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கானலாபாடி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகள் அஸ்வினி என்பவர், தனக்கு வசிக்க வீடு இல்லாமல் தவிப்பதாகவும், அரசு வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு வழங்கியும் அதிகாரிகள் அலைகழிப்பதாக புகார் மனு அளித்தார்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

Related Stories: