கோவில்பட்டியில் பரிதாபம் செல்போனில் கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

கோவில்பட்டி : கோவில்பட்டியில் செல்போனில் டேட்டா தீர்ந்ததால் கேம் விளையாட முடியாத மனவேதனையில் 8ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள்நகரைச் சேர்ந்தவர் சுசிகரன். இவரது மனைவி வித்யா சரஸ்வதி. இவர்களுக்கு குகன் (13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுசிகரன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குகன் அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருக்கும் போது குகன் செல்போனில் நண்பர்களுடன் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த இரண்டு செல்போன்களிலும் விளையாடிய அவரால் போன்களில் டேட்டா தீர்ந்ததால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்று புலம்பி உள்ளார். மேலும் தந்தையிடம் சொல்லி செல்போன்களுக்கு டேட்டா போட்டு விடுமாறு தனது தாயிடம் குகன் கூறியுள்ளார். அதற்கு அவர், ‘இன்று விளையாடியது போதும், போய் படி நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இலுப்பையூரணி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்

இதுகுறித்து குகனின் தந்தை சுசிகரன் கூறும்போது, ‘என்னுடைய மகன் நன்கு படிக்க கூடியவர். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து வந்தார். செல்போனில் கேம் விளையாடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனை நாங்கள் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை. நெட் தீர்ந்து விட்டதால் கேம் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது, இது போன்ற விளையாட்டுகளை முற்றிலுமாக தடை செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பப்ஜி, பிரீ பையர் போன்ற விளையாட்டுக்கள் இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தாலும், வெவ்வேறு வழிகளில் அதனை செல்போன்களில் டவுன்லோட் செய்து விளையாடும் பழக்கம் இருந்து வருகிறது. குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: